நாம்தமிழர்கட்சியில் இணைந்தார் இயக்குநர் சேரன்

தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையிலேயே நிறுவ வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் 22-08-2017 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று கண்டனவுரையாற்றினார்.

அதுசமயம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த கே.ராஜன், இயக்குநர் சேரன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகர் மன்றப் பெருமக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றினார்கள்.

மேலும் மாநில ஒருங்கிணைபாளர்கள் அன்புத்தென்னரசன், கலைக்கோட்டுதயம், ஆன்றோர் அவை மறத்தமிழ்வேந்தன், மகளிர் பாசறை செயலாளர்கள் சீதாலட்சுமி, அமுதாநம்பி, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுச்செல்வன், ஜெகதீசப்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் திலீபன் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை ஈசுவரன் மற்றும் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.​

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர், இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

நடிகர் திலகத்தை வெறுமனே நடிகர் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்க்க இயலாது. ஐம்பதாயிரம் ஆண்டுகள் தொன்மை பெருமைமிக்க தமிழர் என்ற தேசிய இனத்தின் கலைமுகத்தை அடையாளப்படுத்தும் பெருங்கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார். தனது அசாத்திய நடிப்புத் திறனாலும், வியக்கவைக்கும் வசன உச்சரிப்பினாலும் தலைமுறை கடந்தும் எல்லோரது மனதையும் கொள்ளைகொண்டு உலகத்தமிழர்களின் உள்ளத்தில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் புகழையும், பெருமையையும் போற்ற வேண்டியது தமிழ்த்தேசிய இன மக்களின் தலையாயக் கடமையாகும். மொழியே ஓர் இனத்தின் உயிர்; அம்மொழிக்கு வளமும், நலமும் சேர்ப்பவை அம்மொழி சார்ந்த கலையும், இலக்கியங்களுமாகும். ஆகவே, கலையையும், இலக்கியங்களையும் தரிசிக்கக் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அங்கு பேசிய பலரும் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பாகப் பேசிய இயக்குநர் சேரன், இதற்கு முந்தைய நாள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

நோபல்பரிசு பெற்றதில் இந்தியாவில் இரண்டாவதாக இருப்பவர் சிவி ராமன் என்ற தமிழர். 1930ல் இயற்பியல் துறைக்காக.. சொந்த ஊர் திருச்சி… நாம் தமிழர்

கடவுள்,மதம்,உறவு,வாழ்க்கை காதல்,தத்துவம் இயற்கை,கற்பனை அனைத்திலும் மிகச்சிறப்பாக எழுதியகவிஞன் உலகிலேயே கவியரசுகண்ணதாசன் மட்டுமே..நாம் தமிழர்

என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பல ட்வீட்டுகளில் அவர் கருத்தைச் சொல்லிவிட்டு கடைசியில் நாம்தமிழர் என்றே முடிக்கிறார். இதிலிருந்து அவர் நாம்தமிழர்கட்சியில் இணைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response