ஓவியா மாதிரி ஆக முயலும் சுஜா, காஜலுக்கு காயத்ரியைப் பிடிக்கிறது

பிக்பாஸ் வீட்டில் அப்படியொரு காட்சியை இதுவரை பார்த்ததில்லை சுஜா அறையைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தார். ‘முடியலைன்னா விட்டுடுங்க’ என்றார் பிந்து அனுதாபத்துடன். ‘பரவாயில்லை. முடிச்சிடறேன்’ என்றார் சுஜா.பிறகு பிக்பாஸிடம் பேசும் போது, ‘ஒரு வேலையை துவங்கி விட்டால் செய்து விட்டுத்தான் முடிப்பேன்’ என்றார். விவேகம் டிரைய்லரைப் பார்த்திருப்பாரோ. முதுகு வலிக்குதுன்னா.. விட்டுடுங்கன்னு எத்தனையோ தடவை சொல்றேன் கேட்கலைன்னா என்ன பண்ண முடியும்? என்றார் ரைசா. ஆனாலும் தன் வேலையில் கவனமாக இருக்கும் சுஜா, ஓவியாவின் இடத்தைப் பிடிக்க முயல்வது தெரிகிறது.

பணி செய்பவர்களைக் கெடுப்பவர்கள்தான் ஒரு குழுவின் பின்னடைவிற்கு அதிகக் காரணமாக இருப்பார்கள். இது போன்று உடலுழைப்பு சார்ந்த பல பணிகளை நாம் இன்று கை விட்டு விட்டதால்தான் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம்.

பிந்துவின் உத்தரவின் பேரில் வையாபுரி காமிராவின் முன்பு வந்து சில மசாலா பொருட்களை கேட்டார். பார்பி பொம்மை பேச முயன்றால் எப்படி ரணகளமாக இருக்குமோ அப்படியொரு தோரணையுடன் பின்னணியில் தீவிரமாகப் பேச முயன்றார் பிந்து. அவருடைய தமிழ் தட்டுத் தடுமாறியது. அந்தத் தமிழும் அழகுதான் என்பர்.

காஜல் – பிந்து – சுஜா என்று மூவர் குழு பேசிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்தற்கும் உள்ளே வந்த பிறகான அனுபவத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் பற்றி. குறிப்பாக காயத்ரி எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி.காஜலும் காயத்ரியும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவர்கள். எனவே அவர்களின் அலைவரிசை ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

பிக்பாஸின் பார்வையாளர்களுக்கு காயத்ரியின் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் பிடிக்காமல் போன போது, காஜல் போன்றவர்களுக்கு மட்டும் காயத்ரியைப் பிடித்து விடுகிறது.

Leave a Response