77 ஏக்கருக்கு 77 ரூபாய் வரி- கோக் ஆலைக்கு சிவப்புக்கம்பளம் விரிக்கும் தமிழக அரசு


ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 77 ஏக்கர் பரப்பில் பன்னாட்டு நிறுவனமான கோக் குளிர்பான நிறுவனம், ஆலையை துவக்க நிலம் வாங்கியுள்ளது. இந்த ஆலையில் தினமும் குளிர்பானங்களை தயாரிக்க நியூ திருப்பூர் குடிநீர் திட்டத்தின் கீழ் 30 முதல் 40 லட்சம் லிட்டர் காவிரி ஆற்று நீரை எடுத்து பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது. இதுபோக ராட்சத போர்வெல்கள் அமைத்து நிலத்தடி நீரையும் பயன்படுத்தி கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாக கிராம மக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் கோக் நிறுவனமும் நிலத்தடி நீரை உறிஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். எனவே ஆலைக்கு அனுமதி தரக்கூடாது என்று விவசாயிகள், பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆலையை தொடங்கும் முன்னரே கோக் தொழிற்சாலை நிர்வாகம் விதிமீறலில் ஈடுபடுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைக் கண்டித்தும், தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மார்ச் 5ம் தேதி பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்களில் பந்த் நடத்தப்படும் என அதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகள் மற்றும் வணிக, வர்த்தக நிறுவன அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் அறிவித்தன. இதன்படி பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்களில் முழு அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தின.
பெருந்துறை நகரில் எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. காய்கறி மார்க்கட்டும் அடைக்கப்பட்டிருந்தது. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின. சென்னிமலையிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான கைத்தறி மற்றும் விசைத்தறிக்கூடங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் விசைத்தறி, கைத்தறிக்கூடங்கள் வெறிச்சோடின.
29 அமைப்புகளின் ஆதரவு காரணமாக, இந்த இரு ஒன்றியங்கள் மட்டுமின்றி தொகுதியின் மற்ற இடங்களிலும் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் பெருந்துறை தொகுதியிலுள்ள பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சென்னிமலை பேரூராட்சிகளிலும் முழு கடையடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் தொகுதி பெருந்துறை. கோக் தொழிற்சாலைக்கு எதிராகவோ அல்லது கடையடைப்புக்கு ஆதரவு கோரியோ துண்டு பிரசுரம் விநியோகித்தாலோ, பிளக்ஸ், பேனர்கள் வைக்க முயன்றாலோ காவல் துறையினர் மிரட்டுகின்றனர். சொந்த தொகுதி மக்களையே போலீசாரை ஏவி அமைச்சர் மிரட்டுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ஆண்டுக்கு 77 வரி மட்டுமேசிப்காட் வளாகத்தில் 77 ஏக்கரில் ஆலையை துவங்கும் கோக் நிறுவனத்துக்கு, ஏக்கருக்கு ஒரு ரூபாய் வீதம் ஆண்டுக்கு 77 ரூபாய் மட்டுமே வரி நிர்ணயித்து 99 ஆண்டுகளுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: பஸ் கட்டணம், மின் கட்டணம் உயர்வு மட்டுமின்றி, பட்ஜெட்டில் புதுப்புது வரிகள் போட்டு மக்களிடம் இருந்து பணத்தை அரசு வசூலிக்கிறது. நாட்டின் உயிர்நாடியான விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களை குறைக்க முயல்கிறார்கள். ஆனால் எந்த அடிப்படையில் பன்னாட்டு நிறுவனத்துக்கு 77 ரூபாய் வரி நிர்ணயித்தார்கள். இவர்கள் குளிர்பானம் தயாரித்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்யப்போகிறார்களா? இத்தகைய குளிர்பானங்களால் உடலுக்கு கேடு என உலகளவில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முடிவு காணாமல் விடமாட்டோம்.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Leave a Response