சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

சென்னை கிண்டியில் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை பள்ளிக்கு வந்த அந்த இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு மாணவர்கள், ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு பள்ளிக்குப் பூட்டுப் போட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பள்ளியின் இடத்துக்கு வாடகை கொடுக்கவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் ரூ.10 கோடி வாடகை தொகையாகத் தர வேண்டியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது ரூ.2 கோடி தருவதாக நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர். அந்தத் தொகையை தருவதிலும் இழுத்தடித்தனர். அதனால் பள்ளிக்கு பூட்டு போடும் சூழ்நிலை உருவானது’’ என்றார்.

நில உரிமையாளர் வெங்கடேஸ்வரலு பூட்டுப் போட்டதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள், வேளச்சேரியில் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்செய்தி வெளியானது முதல் சமூகவலைதளங்களில் ரஜினி குறித்தும் லதாரஜினி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

பேராசிரியர் ராஜநாயகம் இதுபற்றி எழுதியுள்ள குறிப்பில்,

சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

நம் தலைவரின் மனைவியார் நடத்தும் பள்ளி இயங்கும் இடத்திற்கு வாடகை தர இயலாத நிலையில் கேட்டை மூடிவிட்டாராம் ஓனர்…

அங்கு படிக்கும் கோடீஸ்வர வீட்டுக் குழந்தைகளுக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் என்பதை அந்த ‘ஓனர்’ ஏன் சிந்தித்துப் பார்க்கவில்லை…?

இந்நிலையில், தலைவருடைய ஒரே சொத்தான ராகவேந்திரா மண்டபத்தை வேறு நீங்கள் ஏற்கெனவே எழுதி வாங்கி விட்டீர்கள்…

ரசிகர்களே, தலைவரின் தன்மானம் காக்க உடனே களமிறங்க வேண்டியது நம் கடமை அல்லவா…

வாடகைக்கு வழி செய்வோம். ஆஸ்ரமத்தை மீட்போம்.
பள்ளிக்கெனச் சொந்த இடம் வாங்க அள்ளித் தருவோம்…

ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்கக்காசு கொடுக்கும் நாம் இதைக்கூடவா செய்ய மாட்டோம்..

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response