பொய் பேசும் சிங்கள அமைச்சர்- கடும் கண்டனம் தெரிவிக்கும் திருமாவளவன்

ஐநா மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றிய இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசியுள்ளதைக் கண்டித்து தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.

ஐநா அவையில் இலங்கைஅமைச்சர் மங்களசமரவீர,  இராணுவம் அபகரித்த தமிழர்களின் நிலங்கள் தொடர்பாக அப்பட்டமான பொய்த் தகவல்களை அளித்துள்ளார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஐநா மன்றத்தின் மாண்பைக் கெடுக்கும்வகையில் பொய் பேசியுள்ள இலங்கைப் பிரதிநிதி மங்கள சமரவீரவை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஐநா மனித உரிமை ஆணையரை வேண்டுகிறோம்.
நேற்று தொடங்கிய ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய அந்த அமைப்பின் ஆணையர் திரு ஸெய்த் ரா அத் அல் ஹுசைன் அவர்கள் “பயங்கரவாதம் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி எந்தவொரு நாடும் தம் குடிமக்களுக்கு மனித உரிமைகளை மறுக்கக்கூடாது” என வலியுறுத்தியிருந்தார். அவர் பேசியதற்கு நேர் மாறாக இலங்கை அரசின் பிரதிநிதியின் பேச்சு அமைந்திருக்கிறது. “2009ஆம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அத்தியாவசியமானது. அது நடத்தப்படவில்லையென்றால் மனித உரிமைகளை மீட்பதோ, தேசத்தின் வளர்ச்சியை முன்னெடுப்பதோ முடியாமல் போயிருக்கும்” என இலங்கை வெளியுறவு அமைச்சர் பேசியிருக்கிறார். தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலை இப்படி ஐநா மனித உரிமைக் கவுன்சிலிலேயே நியாயப்படுத்துகிற ஓர் அரசு எப்படி நடுநிலையான விசாரணையை நடத்தும்? எனவே, இப்போதாவது இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் நியாயத்தை ஐநா மனித உரிமை கவுன்சில் புரிந்துகொள்ளவேண்டும். அதனடிப்படையில் போர்க்குற்ற விசாரணை வரம்பை விரிவுபடுத்தவேண்டும்.
இராணுவம் அபகரித்துள்ள நிலத்தைப் பற்றிப் பேசிய அமைச்சர் மங்கள சமரவீர “அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அதில் முதல் கட்டமாக 220 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும் ” எனவும் பேசியுள்ளார்.
வடக்கு மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனைச் சந்தித்து இராணுவம் ஆக்கிரமித்துள்ள 6,500 ஏக்கர் நிலத்தில் ஐந்தாயிரம் ஏக்கரையாவது உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டபோது, அமைச்சர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக மாகாண சபையில் பேசும்போது தெரிவித்திருந்தார். அதற்கு மாறாக, இப்போது மங்கள சமரவீர வெறும் ஆயிரம் ஏக்கர் நிலம் எனப் பேசியுள்ளார். இது முழுப் பூசணிக்காயை ஒரு சோற்றுப் பருக்கையில் மறைக்க முயற்சிக்கும் செயலாகும்.
தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதலை நியாயப்படுத்தி ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றியிருக்கும் இலங்கை அமைச்சரை இந்திய அரசு கண்டிக்க முன்வரவேண்டும். இதற்கு மேலும் இலங்கை அரசின் வார்த்தைகளை நம்பிடாமல் இனப்படுகொலை குறித்த விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவிடவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Response