பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மீனவர்கள் பொங்கியெழுந்தனரா? உண்மை என்ன?

நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். மீனவர்களைக் கைதுசெய்ததோடு, அவர்களின் படகுகளையும் கைப்பற்றினர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இந்தக் கைதைக் கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில், மீனவர்கள் மற்றும் மீன் விற்பனையாளர்கள் என சுமார் 5,000 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று, மீன் பிடித்தல் மற்றும் அது சார்ந்த வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கைது நடவடிக்கைக்கு இதுவரை இல்லாத புதியகதை ஒன்று சொல்லப்படுகிறது. அது, இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த ஒருவரை தமிழக மீனவர்கள் கடத்திவிட்டனர் என்பதுதான்.

கோட்டைப்பட்டினம் மீனவர்களால் இலங்கை கடற்படை வீரர் கடத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. எனினும் இந்தத் தகவலை இலங்கைக் கடற்படையினர் முற்றாக மறுத்துள்ளனர். அவ்வாறான கடத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், 12 விசைப்படகுகளுடன் 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கைக் கடற்படையினரில் ஒருவர் தமிழக மீனவர்களால் கடத்தப்பட்டதன் காரணமாகவே பெரும் எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு எவ்வளவோ மன்றாடியும் மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு மோடி அரசு எந்தப் பதிலும் சொல்லவில்லை. இதனாலேயே துணிச்சலாக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கி வருகிறது. இதனால், நமக்கு நாமே உதவி என்று முடிவு செய்து, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மீனவர்கள் பொங்கியெழுந்தனரா?

உண்மை என்ன?

Leave a Response