
எஸ் எஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ரீநிவாசன் தயாரித்துள்ள ‘சார்லஸ் ஷபிக்,கார்த்திகா’ திரைப்படம் வைப்ரண்ட் மூவீஸ் வெங்கடேஷ் வெளியிட உள்ளனர். அறிமுக இயக்குனர் எஸ். சத்தியமூர்த்தி இந்த அழகிய காதல்- த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இவர் பிரகாஷ் ராஜ் மற்றும் கேவி. குகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர்.
ஷரண்குமார். ஜெய் குஹைனி உட்பட பலர் நடித்திருக்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர்கள்சங்கத்தலைவர் தாணு. இயக்குனர்கள் அட்லீ, பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
தாணு பேசும்போது, சிஎஸ்கே என்கிற இந்தப்பெயர் படத்துக்குப் பெரியபலம். இந்தப் பெயரைச் சொல்வதும் பலம், இதைப் பயன்படுத்தக்கூடாது என்று யாராவது வழக்குத் தொடுத்து சர்ச்சை ஏற்பட்டால் அதுவும் பலம்தான் என்றார்.
படத்தை வெளியிடும் வைப்ரண்ட் வெங்கடேஷ் பேசும்போது, படம் நன்றாக இருப்பதாலேயே வாங்கி வெளியிடுகிறேன் என்று சொல்லிவிட்டு இதுபோன்ற படங்களை எந்தத் தொலைக்காட்சியும் வாங்குவதில்லை அதற்கு தயாரிப்பாளர்கள்சங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தாணுவுக்கு வேண்டுகோள் வைத்தார்.
படத்திற்கு வசனம் எழுதிய பத்திரிகையாளர் கோ,வி.லெனின் பேச்சு சுவையாக இருந்தது, இந்தப்படத்துக்கு வசனம் எழுதப் போகும்போதே இவ்வளவு பக்கங்களுக்குள் வசனங்கள் இருந்தால் போதும் என்று இயக்குனர் சொன்னார். அவர் சொன்னதைவிட குறைவாகத்தான் எழுதிக்கொடுத்தேன். இதுவே போதும் என்று சொல்லிவிட்டார். படப்பிடிப்பின்போது நடிகர்கள் அதிலும் குறைவாகத்தான் பேசினர், படத்தொகுப்பில் இன்னும் குறைந்துவிட்டது, மொத்தத்தில் மவுனமே வசனங்களாகி விட்டன என்றார்.
விரைவில் இந்தப்படம் வெளியாகவிருக்கிறது.