ஓவியாவின் கெத்து தான் அழகே!

பிக்பாஸ்

சிநேகன் என்ன தான் கட்டிப்பிடி மன்னனாக இருந்தாலும், அவருக்குள்ளும் ஒரு ஈரமனசு இருக்கத்தான் செய்கிறது. இரவு ஓவியா ‘நீங்க யாரு? கேப்டனா? பின்னே ஏன் பேசறீங்க?’ என்று கத்தியபிறகும், மழையில் வெளியே தூங்கும் ஓவியாவைப் பார்த்ததும் ஓடிவருகிறார்; உள்ளே வா என்று கெஞ்சுகிறார். நேற்றே காயத்ரியிடம் ‘நீங்க தான் எப்பப்பார்த்தாலும் ஓவியாவைப் பற்றியே பேசிக்கிட்டு இருக்கிறீங்க’ என்று நேராகவே சுட்டிக்காட்டினார். இன்று ஆரவ் விஷயத்திலும் லேடீஸ் செய்வது தப்பென்று சொல்கிறார். ஆனால் காயூ கொஞ்சம் ஒதுக்கினாலும், பயந்து காயூ பக்கம் ஓடிவிடுவார் என்பது தான் பிரச்சினை.

என்னமோ பிந்து பொந்துன்னு பில்டப் கொடுத்தாங்க. அது பாவம், பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு இருக்கு. ஓவியாவை எப்படி டீல் பண்றதுன்னு எச்சை மாஸ்டரே முழி பிதுங்கும்போது, இந்த பச்சைக்குழந்தை என்னய்யா செய்யும், பாவம்! வெளில இருந்து நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, உள்ளே போய் ஓவியா பக்கம் நிற்போம்னு கூட பிந்து நினைச்சிருக்கலாம். ஆனால் அது அவ்வளவு ஈஸி இல்லைன்னு இப்போ புரிஞ்சிருக்கும். நெருப்புடா, நெருங்குடா பார்ப்போம்!

வையாபுரி இன்று உயர்ந்த மனிதராக ஆனார். ஓவியாவின் மனதில் ஆசையைத் தூண்டிவிட்டு, கடந்த இருவாரங்களாக நட்பையும் தாண்டிய நெருக்கத்தைக் காட்டிவிட்டு இப்போது ஆரவ் ஓடுவது தப்பு என்று ஓங்கிச்சொன்னார். ஆரவ்விடமே நேரடியாக ‘ஓவியாவிடம் முறைத்துவிட்டு, காயூ குருப்பிடம் சிரித்துப்பேசுவது சரியா?’ என்று கேட்டபோதே, அண்ணன் வையாபுரியை கடைசிவரை உள்ளேயே வச்சிட வேண்டியது தான் என்று ஓவியா ஆர்மியில் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. சாரி அண்ணி..அண்ணன் வர இன்னும் லேட் ஆகும்! ஒன்னு பண்ணலாம்..என்னைக்கு அண்ணியை நினைச்சு சொந்தமா ஒரு கவிதை எழுதுறாரோ, அன்னைக்கு அவரை ரிலீஸ் பண்ணுவோம்!

ஓவியாவின் சேட்டைகளைப் பார்த்து மொத்த டீமும் அலறியதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. ‘ஒரு நிமிசம்கூட…ஒரு செகண்ட்கூட அந்த கூட்டம் என்னை பரிதாபமாப் பார்த்திடக்கூடாது’ என்பதில் ஓவியா தெளிவாக இருக்கிறார். அந்த கெத்து தான் அழகே!

‘சாப்பிடு’ என்ற காயூவிற்கு விழுந்தது கும்மாங்குத்து. ‘இந்த அக்கறையெல்லாம் வேண்டாம்..எனக்கு அம்மா இருக்காங்க’ என்று தலைவி அடித்த அடியில், காயூ மூஞ்சி செத்துப்போனது.

‘பாயாசம், சாப்பிடு’ என்று வந்த பாசக்காரி ரைஸாவிற்கு குடுத்த குடுப்பில், அவர் சிநேகனிடம் ஓடிப்போய் ‘பயமா இருந்தது..ஓடிவந்துட்டேன்’ என்றது ரணகளம்! அதைவிடவும் ரகளை, டாட்டூ பற்றிப் பேசியது. ‘அது என்ன காலில் டாட்டூ?’’கிரீடம்’ ‘ஓ…கிரீடம்னா தலையில தானா போடணும். நீ ஏன் கால்ல போட்ருக்கே?’ என்று தலைவி போட்ட போடில் ‘இதுக்குத்தான்யா நான் பாட்டுக்கு இத்தனை நாளா மிக்சர் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்’ என ரைஸா தெறித்தார்! ஆனால் ஆரவ்விடம் ‘நீயும் ஓவியாவின் ஆசையை தூண்டிவிட்டாய்’ என்று ரைஸாவும் சொன்னதை ரசித்தேன்.

‘டாஸ்க் இருந்தால் கூப்பிடுங்க…ஆனால் நான் டாஸ்க் பண்ண மாட்டேன்’ என்று சொன்னதில் ஆண்களுக்கு கிர்ரென்று தலை சுத்திவிட்டது. சிநேகன் வாய்விட்டே புலம்பிவிட்டார்..ட்ரிக்கர் புகழ் சக்தி ட்ரிக்கர் ஆகிவிட்டார். அங்கேயிருந்த காயூவிடம் இருந்து சத்தமே இல்லை. எப்படி இருந்த காயூ, இப்படி ஆகிவிட்டார்!

இருப்பதிலேயே விவரம் சாப்பாட்டு ராமன் தான். ஓவியா கைல ராங்கு காட்டினால், அல்லாமே ராங்கா பூடும் என்று தெளிவாக இருக்கிறார். முடிந்தவரை தலைவி கண்ணில் சிக்குவதே இல்லை. தான் உண்டு, வெள்ளைக்கரு முட்டை உண்டு என்று ஒதுங்கிக்கொள்கிறார். கத்துக்கிட்ட மொத்த யோகாவையும் இறக்கி, தந்திரமாக உயிர் தப்பி வாழ்கிறது அந்த அரியவகை உயிரினம்!

பரணியை ஒதுக்கி வைத்து வெறுப்பேற்றினார்கள். அவர் சுவர் ஏறிக்குதித்து ஓடினார். தலைவி அதனாலோ என்னவோ, தான் முந்திக்கொள்கிறார். ‘நீங்க என்னடா ஒதுக்கி வைக்கிறது, நான் ஒதுக்கி வைக்கிறேன். நீங்க என்ன சீண்டறது, அதுக்கு முன்னே நானே சீண்டறேன்..வர்லாம், வர்லாம் வா!” என தனி விதமாக டீல் செய்து, பயந்து ஓட நான் பரணி இல்லைடா என்று மாஸ் காட்டுகிறார்.

இறுதியில் வையாபுரியும், சிநேகனும் சமாதானம் பேசி, ஓவியாவை காதல் மாயையில் இருந்து விடுவித்தார்கள். ‘நான் எவனுக்கும் செகண்ட் சான்ஸ் கொடுக்க மாட்டேன்..பை’ என்று தலைவி பேக் டூ ஃபார்ம் ஆனதில் சந்தோசம்.

Leave a Response