நரேந்திர மோடி இலங்கை செல்லக் கூடாது- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வலியுறுத்தல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்ல இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதையொட்டி இந்தியப் பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் வே.பாரதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் விவரம்…..

உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டு விசாரணையா, இலங்கை அரசே நடத்துவதாகச் சொல்லும் உள்நாட்டு விசாரணையா எனும் விவாதத்தின் பின்னணியில் மோதியின் இலங்கைப் பயணத்துக்குத் திட்டமிடப்படுகிறது.

ஐநா மனித உரிமை மன்றத்தின் பன்னாட்டுப் புலனாய்வுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கவில்லை. தற்போதைய சிறிசேனா அரசோ உள்நாட்டு விசாரணையின் பக்கம் நிற்கிறது. அதுவும் பன்னாட்டு விசாரணை அறிக்கை முன்வைக்கப்படுகிற நிலையில் உள்நாட்டு விசாரணை மீது அரசின் பிடி இறுகுகிறது. புலனாய்வு அறிக்கை ஐநா மனித உரிமை மன்றத்தில் மார்ச் 25 ஆம் நாள் முன்வைக்க இருந்தது. அந்த அறிக்கையை குற்றவாளிகளோடு கைகோர்த்து ஆட்சி செய்யும் இன்றைய அரசு தள்ளிப்போட இந்திய அமெரிக்கத் துணையோடு முயற்சி மேற்கொண்டது. முயற்சியின் பலனாய் செப்டம்பரில் அறிக்கை முன்வைக்கப்படும் என மனித உரிமை மன்ற ஆணையர் அறிவித்திருகிறார். இதைச் சிங்கள அரசு தன் வெற்றியாகவே கருதுகிறது. பன்னாட்டு விசாரணையை மறுப்பதிலும் இனப்படுகொலையை மூடி மறைப்பதிலும் தமிழர்களுக்கு அரசியல் நீதி இல்லாமற் செய்வதிலும் ராசபக்சேவுக்கும் சிரிசேனாவுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதையே இவை மெய்ப்பிக்கின்றன.

ராசபக்சேவை வீழ்த்திவிட்டு அரியணை ஏறியுள்ள சிரிசேனா அரசு ஏன் பன்னாட்டு விசாரணை கண்டு அஞ்சவேண்டும். அறிக்கை வருவது குறித்து ஏன் பதற்றப்பட வேண்டும். இந்த அரசு வந்ததே நல்ல மாற்றம் என நம்புகிறவர்கள் நம்பச் சொல்கிறவர்கள் இதற்கு விடை தர வேண்டும். நம்மைப் பொறுத்தவரை இனப்படுகொலை நீதிக்காக நிற்கிறோம். இதில் ஊன்றி நின்று சொன்னால் இரு அரசுகளுமே இனப்படுகொலை அரசுகள்தான்.

தமிழக சட்டமன்றம் பன்னாட்டு விசாரணையும் பொருளாதாரத் தடையும் தமிழர் நீதியும் வேண்டுமென இந்தியாவுக்கு உரக்கச் சொல்லியுள்ளது. தமிழர்களின் இந்த உணர்வை மதிப்பதாக இருந்தால் எந்தச் சார்பும் இல்லாத பன்னாட்டுக் குழு புலனாய்வு நடத்துவதை இந்தியா ஆதரிக்கட்டும். புலனாய்வு அறிக்கை முன்வைப்பை ஆறு மாதங்களுக்குத் தள்ளிப்போட்டதை கண்டிக்கட்டும். திட்டமிட்டபடி மார்ச் 25 ஆம் நாள் அறிக்கையை வெளியிட வேண்டுமெனக் கேட்கட்டும். அறிக்கையை நேர்மையாக எதிர்கொண்டு தங்கள் தரப்பு நியாயங்கள் ஏதேனும் இருந்தால் அதை முன்வைக்கச் சொல்லி சிரிசேனா அரசை வலியுறுத்தட்டும். சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையின் இனக்கொலை குறித்த தீர்மானத்தை அறிந்தேற்கட்டும். இவை எதையும் செய்யாமல், செய்யும் முயற்சியும் இல்லாமல் இந்தியப் பிரதமர் இலங்கைப் பயணம் மேற்கொண்டால், அது சிங்கள அரசுக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதி செய்யத்தான் உதவும்.

தமிழர்களின் நீதிப் போராட்டத்துக்கு ஆதரவாக இதுவரை எதையும் செய்யாமல் சிங்களத்துடனான அரசுறவை இந்தியா என்றும் போல் தொடர்கிறது. இதன்மூலம் தமிழக மக்களின் ஒன்றுபட்ட உணர்வை இந்தியா காலில் போட்டு மிதித்துவிட்டது.

தமிழக மக்கள் சிங்கள அரசை இனப்படுகொலை அரசு என வரையறுத்துள்ளார்கள். இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையைச் செய்த சிங்களத்தைத் தண்டிக்கப் போராடி வருகிறார்கள். அதுகுறித்த புலனாய்வுக்குக் கூட ஒத்துழைக்க மறுப்பதும் அதன் அறிக்கையை செயலிழக்கச் செய்யும் முயற்சியும் சிங்கள அரசின் மாறாத்தன்மையையே உறுதி செய்துள்ளது. சிங்கள அரசைத் தனிமைப்படுத்துவதன் மூலம்தான் இப்போக்கை தடுத்து முறியடிக்க முடியும். தமிழர்களை குடிமக்களாய் கொண்டு ஆளும் இந்தியாவின் பிரதமர் இலங்கை செல்வது சனநாயகத்துக்கு விரோதமானது. .

இனப்படுகொலை நீதிக்கு இலங்கையை உட்படுத்த வேண்டுமானால் இந்தியா இலங்கையோடு அரசுறவில் வர்த்தகத்தில் பண்பாட்டில் என எதிலும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஈழத் தமிழர்க்கு ஈடுசெய் நீதி கிட்டும் வரை நம் முழக்கம் ஒன்றேதான் ‘இலங்கையைப் புறக்கணிப்போம்’! இதில் தமிழ் மக்கள் உறுதியோடு இருக்க வேண்டுகிறோம்.

எதற்காக என்றாலும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்லக்கூடாது என தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசும் இதை வலியுறுத்தக் கோருகிறோம்.

உலகத் தமிழர் தாகம்! தமிழீழத் தாயகம்!

 

Leave a Response