மணல்நகரம்- திரைப்படவிமர்சனம்.


ஒருதலைராகம் படத்தில் நாயகனாக நடித்த சங்கர் இயக்கியிருக்கும் இந்தப்படத்தின் கதை முழுக்க முழுக்க துபாயிலேயே நடக்கிறது. மொத்தப்படமும் அங்கேயே படமாக்கப்பட்டுமிருக்கிறது. படத்தின் பெயருக்கு இதுவே காரணம்.
தமிழகத்திலிருந்து அங்குபோய் சிறுவணிகம் செய்து வாழ்ந்துவருகிற பிரஜின், தன் நண்பன் கவுதம்கிருஷ்ணாவையும் அங்கே வரவழைக்கிறார். ஏற்கெனவே அவருடன் மூன்றுபேர் தங்கியிருக்கிறார்கள். இவரும் போய்ச்சேர அந்த வீட்டில் மொத்தம் ஐவர். இவர்களில் பிரஜின், கவுதம்கிருஷ்ணா, ஜெய்ஸ் ஆகிய மூவருக்கும் தனித்தனியே கதைகள் இருக்கின்றன. மற்ற இருவரையும் ஊறுகாய் போலப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பிரஜினுக்கு ஒரு காதலி. தனிஷ்கா அந்த வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் ஒர் உணவுவிடுதியில் வேலை செய்கிறார். அவர் வேலைக்குச் சேர்ந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த வேலையைத் தொடர்ந்து செய்யமுடியாத சூழல் ஏற்படுகிறது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இரண்டுமே பணச்சிக்கல்தாம். பணம் கொடுத்தவர்கள் அதற்கு ஈடாக தனிஷ்காவைப் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பேயிடமிருந்து தப்பி பிசாசிடம் சிக்கிய கதை அவருடையது.
காதலிக்காக பிரஜின் அந்தச்சிக்கலில் தலையிடப்போக அவருடன் சேர்ந்து நண்பர்களும் அந்தச்சிக்கலில் தலையிடுகிறார்கள். இதன்விளைவு பல்வேறு சிக்கல்கள். அவற்றைத்தாண்டி அந்தச்சிக்கலைச் சமாளித்தார்களா? என்கிற ஒற்றைப்பாதையில் போகாமல் பல்வேறு பாதைகளில் பயணிக்கிறது திரைக்கதை.
பிரஜின், தன்னுடைய வேடத்துக்கேற்ப பொருத்தமாக நடித்திருக்கிறார். அவருடைய காதலியாக நடித்திருக்கும் தனிஷ்காவும் குறைவைக்கவில்லை. நண்பராக மட்டுமின்றி இன்னொருநாயகனாக நடித்திருக்கிறார் கவுதம்கிருஷ்ணா. அவர் மிகஇயல்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ஒரு அக்கா இருக்கிறார் அந்த அக்கா நோய்வாய்ப்பட்டு படுக்கையிலேயே இருக்கிறார் என்கிற கிளைக்கதை எதற்கு? மையக்கதைக்கு அதனுடைய தேவை மிகக்குறைவே.
கவுதம்கிருஷ்ணாவின் காதலியாக வருகிற வருணாஷெட்டி அளவோடு நடித்திருக்கிறார். காதலனைக் காப்பாற்ற காதலையே விலையாகக் கொடுக்கிற வேடம் அவருக்கு. பல படங்களில் பார்த்த காட்சிதான் என்றாலும் அதை நன்றாகவே செய்திருக்கிறார் வருணாஷெட்டி. ஒரு கொலை நடந்துவிட்டால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் ஏதாவதொரு நட்டஈடு வாங்கிக்கொண்டு வழக்கைத் திரும்பப்பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு துபாய் சட்டத்தில் இருக்கிறதாம். அதை இந்தக்கதையில் சரியானமுறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர்.
வருணாஷெட்டியின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் சங்கர் பெரும்பணக்காரத் தோரணையைக் காட்டுகிறார். தங்களிடம் வேலை செய்பவனை மகள் காதலிக்கிறாள் என்று தெரிந்தும் அலட்டிக்கொள்ளாமல் அதை முறியடிக்கிறார். நாயகி தனிஷ்காவின் முதலாளியாக நடித்திருக்கும் விகேவுக்குக் கெட்டவன் வேடம். அதற்குக் குறைவைக்காமல் நடித்திருக்கிறார்.
நாயகி தன்ஷிகா, அவருடைய அம்மா இரண்டு தங்கைகள் கொண்ட குடும்பம், இன்னொருநாயகன் கவுதம்கிருஷ்ணா, நண்பராக வருகிற ஜெய்ஸ், அவருடைய கிளைக்கதையில் வருகிற ஒரு பெண் (சாக்சிசர்மா) பிரஜினுக்கு உதவிசெய்யப்போய் மரணத்தைத் தழுவுகிற ராம்கி என எல்லாப்பாத்திரங்களுமே சோகத்தைப் பிழிந்தெடுப்பதாகவே இருக்கின்றன. மணல்நகரமான துபாயில் பிழைப்புக்காகச் சென்ற சிலருடைய கதைதான் இந்தப்படம் எனும்போது மையக்கதையே சோகக்கதையாகத்தான் இருக்கிறது. அது மட்டுமின்றி நாயகர்கள், நாயகிகள், நண்பர்கள் ஆகிய எல்லோருக்குமே தனித்தனியாகச் சோகக்கதைகள். எதற்கு இவ்வளவு சோகம்?
படத்திற்கு இசையமைத்திருக்கும் ரெனில்கவுதம் கவனிக்கவைக்கிறார். பாடல்கள் கேட்கும்படி இருப்பதோடு பின்னணிஇசையும் உறுத்தாமல் இருக்கிறது.

Leave a Response