இயன்முறை மருத்துவக்(பிசியோதெரபி) கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்- தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள்

இயன்முறை மருத்துவக் கூட்டமைப்பை உருவாக்கவும், அதற்குரிய நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:

மருத்துவ முன்னேற்றங்களும் நவீன கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், புதிய புதிய நோய்களின் தாக்கமும் அதிகரித்தபடியேதான் உள்ளது. எத்தகைய நவீன மருந்துகளின் கண்டுபிடிப்பால்கூட டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய சூழலில் மருந்தோ, அறுவை சிகிச்சையோ இல்லாமல் எத்தகைய பாதிப்புகளையும் தடுக்கக்கூடிய சிறப்புவாய்ந்த இயன்முறை மருத்துவத்தைத் தமிழக அரசு பரவலான செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும். இயன்முறை மருத்துவத்தின் தரத்தை உயர்த்தவும், அனைத்து தரப்பு மக்களையும் இயன்முறை மருத்துவம் சென்றடையவும் அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கையின் போது இயன்முறை மருத்துவக் கூட்டமைப்பை உருவாக்கி போதிய நிதியினை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இயன்முறை மருத்துவ சங்கங்களின் இத்தகைய கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து மக்கள் நலன் காக்க அரசு அசுர வேகம் காட்ட வேண்டும். மேலும், இயன்முறை மருத்துத்தைத் தமிழகத்தின் அத்தனை இடங்களுக்கும் கொண்டு செல்லும் விதமாக மாவட்ட தலைமை மருத்துவ மையம் முதல் ஆரம்ப சுகாதார நிலையம் வரை அனைத்து சுகாதார நிலையங்களிலும் இயன்முறை மருத்துவர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும். மக்கள் நலன் காக்கும் இத்தகைய நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து விரைவாகச் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

Leave a Response