யாழ் மக்கள் எழுச்சி, அனைத்துலகம் அதிர்ச்சி

நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எழுச்சி கண்டது. யாரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை இவ்வளவு மக்கள் பேரெழுச்சியுடன் தம் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகத் தெருவில் இறங்குவார்கள் என்று. இலங்கைக்கு எதிரான ஐ.நா விசாரணைகள் தள்ளிப்போடப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச சமூகம் மீதான முழு நம்பிக்கையையும் இழந்துபோகுமளவுக்கு வெறுமையை உணர்ந்தார்கள். இதனை தெளிவாக உணர்ந்துகொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவசமுதாயம் தன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியது.

தமிழ் மக்கள் இப்போது அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்யும் போராட்டங்களுக்குப் பெரிதாக ஆதரவு வழங்காத விரக்தி மனநிலைக்கு வந்துவிட்டனர். எனவே மக்களை அரசியல் கட்சிகளின் தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரட்டுவது மிகக்கடினமான விடயம். எனவேதான் யாழ். பல்கலைக்கழக மாணவசமுதாயம் தனக்கிருக்கின்ற பங்கை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டது.

அதன்படி பிப்ரவரி 24 அன்று காலை 9.30 மணிக்கு அமைதிப் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போன்றன இதற்கு ஆதரவை வழங்கின. குறிப்பிட்டபடி,சரியான நேரத்தில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மூத்தோரின் ஆசியுடன் பேரணி தொடங்கியது.

மதகுருமார்கள், சமூக அமைப்புக்கள், மாணவர்கள், அரசியல்கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என அணிவகுத்து பல்கலைக்கழக வளாகத்தை விட்டு இராமநாதன் வீதியை அடைந்தது பேரணி. வீதியில் நின்றவர்களும் பேரணியுடன் கலக்க, பல்லாயிரக்கணக்கான மக்களின் அமைதி நடைபயணம் பதாதைகளைத் தாங்கியபடி பலாலி வீதியை அடைந்தது. அங்கிருந்து பயணித்த பேரணியாளர்கள் ஆலடி சந்தி கடந்து கந்தர்மடம் சந்தி வழியாக நல்லூர் ஆலயத்தை நோக்கி நகர்ந்தனர். மேலும் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் தொகை அதிகரித்தது. போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு ஒழுங்கான முறையில் மூவர் மூவராக சேர்ந்து வரிசையாக அனைவரும் நடந்தனர். சில கிலோமீட்டர்கள் அளவிற்கு பேரணியாளர்களின் ஊர்வலம் நகர்ந்தது.

அப்படியே நகர்ந்து நல்லூர் பின்வீதியை அடைந்தவர்கள், அந்தத் திடலில் கூடினர். காணாமல் போனவர்களின் பெற்றோர், உறவினர் பேரணியாளர்களுக்கு முன்வரிசையில் வந்து அழுது அரற்றினர். அந்தக் காட்சி மிகவும் உருக்கமானதாக, அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாகவும், வேதனைப்படுத்துவதாகவும், சர்வதேசத்தின் மீது தமிழர்களின் கூட்டுக் கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது.

தொடர்ந்து சிறு அரங்கு போன்ற உயர் அடைவிடத்துக்கு, யாழ்.பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்தவரும், நிகழ்வின் ஏற்பாட்டாளருமான இராஜகுமாரன், சிவில் சமூக அமையத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய ஆண்டகை இராயப்பு யோசப்பு, சர்வதேச இந்து மத ஒன்றியத்தின் தலைவர், யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலர் துசிந்தன் ஆகியோர் வந்தனர். ஐ.நாவுக்கு சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை இராஜகுமாரன் வாசித்தார். வாசித்து முடிந்ததும், அதனை ஐ.நாவுக்கு வழங்குவதற்கா மத பெரியார்களிடம் கையளித்தார். அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டதும், பேரணி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் பேரணிக்கு எதிர்பார்த்ததை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று வேண்டும் என்பதை அடித்துக்கூறியிருக்கிறார்கள். இதனை அனைத்துலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பேரணியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
யாழ் மக்களின் ஒந்த எழுச்சியைக் கண்ணுற்ற சிங்களர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர் என்றும் பன்னாட்டு உளவுத்துறையினரும் மக்களின் கோபத்தை உணர்ந்துகொண்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response