குஜராத் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், குஜராத் மாநிலத்தின் டியு நகர்பாலிக்கா நகராட்சி தேர்தல் கடந்த ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 72.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூலை 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 13 இடங்களில் 10 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசின் மீதான அதிருப்தியே இந்தத் தோல்விக்குக் காரணமென்று அம்மாநிலத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. குறிப்பாக அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டிக்கு எதிரான மக்களின் மனநிலையை இந்தத் தேர்தல் பிரதிபலித்துள்ளது என்கிறார்கள்.
ஜூன் 30 நள்ளிரவில் ஜிஎஸ்டிக்கு விழா எடுத்தது பாஜக.
விடிந்ததும் நடந்த தேர்தலில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பாரத் சோலான்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டியு நகராட்சி மக்கள் காங்கிரஸை வெற்றி பெறச்செய்து பாஜக-வை புறக்கணித்துள்ளனர். இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இது குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என பதிவிட்டுள்ளார். இதனால் பாஜக வினர் அச்சம் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.