ஜி எஸ் டி யால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கடும்பாதிப்பு – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 4-2017) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,,,,

மண்ணின் வளத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு மக்களின் தலையில் வரியைச் சுமத்தி வருவாய் ஈட்ட நினைக்கிறது.

உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 28 சதவீதம் அளவுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் வரி. ஆனால் தரமான கல்வி, சுகாதாரத்தில் அந்த நாடு 3-வது இடத்தில் உள்ளது.

மத்திய அரசு இந்த வரி வருவாயை வைத்து நாடு முழுவதும் தரமான கல்வி, மருத்துவத்தை கொடுக்குமா? 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. அதன் அடிப்படை என்ன? என்கிற எந்த தெளிவும் இல்லை. வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரியால் விதிக்கப்பட்ட பாதிப்பில் இருந்து அவர்களால் மீண்டு வரமுடியாது. ஊதுவத்தி, கொசுவத்தி, தீப்பெட்டிக்கும் வரி விதித்துள்ளனர். இதனால் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி என்று பெயர் வைத்து விட்டு சரக்குக்கு (மதுவுக்கு) வரி விதிக்காமல் விட்டுள்ளனர். முன்பு கறி…. கறி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது வரி… வரி என்கிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரி மாநில உரிமைகளை நிச்சயமாகப் பாதிக்கும். திரைப்படத் துறை ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தற்போது ஜி.எஸ்.டி யால் திரையரங்குகளுக்கு வரி 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.வரிச்சுமையைச் சமாளிக்க முடியாது என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இப்பிரச்சினையை தமிழக அரசு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

மக்கள் பிரச்சினைகளில் தமிழக அரசு மவுனமாக இருக்கிறது. பெயர் தான் அ.தி.மு.க. அரசு, ஆனால் ஆள்வது பாரதிய ஜனதா அரசு. கதிராமங்கலத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. கதிராமங்கலம் சென்று தான் போராட வேண்டும் என்றில்லை. தமிழகத்தின் எந்த இடத்தில் இருந்தும் கதிராமங்கலம் மக்களுக்காகக் குரல் கொடுப்போம்.

இந்த வி‌ஷயத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை, ஊழியர் தற்கொலை சம்பவங்கள் திகில் படம் பார்ப்பது போல உள்ளது. காவலாளி ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற கேள்விக்கே விடை இல்லை. அங்கு நடக்கும் அனைத்தும் மர்மமாகவே உள்ளது.

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அமைச்சர்களின் செயல்பாட்டை விட தற்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் போன்ற சில அமைச்சர்களின் செயல்பாடு நன்றாக உள்ளது. இப்போது தான் அமைச்சர்கள் பேசவே செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response