ரெமோ படத்துக்காக சிவகார்த்திகேயன்,அனிருத்துக்கு சர்வதேச விருது

ஆண்டுதோறும் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, இவ்வாண்டு ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள் நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில் சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் புதுஇயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ரெமோ படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. அந்தப்படத்தில் பெண் வேடம் போட்டிருந்தார் சிவகார்த்திகேயன். அதே ரெமோ படத்தின் பாடல் பாடியதற்காக இசையமைப்பாளர் அனிருத்துக்கு சிறந்த பாடகருக்கான விருது வழங்கப்பட்டது.

24 ஏஎம் ஸ்டுஸ்டியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ரெமோ படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருப்பதையொட்டி, மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, கடின உழைப்பு என்றும் வீண்போகாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயனுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது என்று பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அந்த விழாவில், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, சிறந்த எதிர்மறை கதாபாத்திரம் திரிஷா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த பாடகி சித்ரா, சிறந்த விமர்சனம் செய்யப்பட்ட நடிகர் மாதவன் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது எஸ்.பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட்டது.

Leave a Response