நிலத்தடி நீரில் எண்ணெய்க்கழிவுகள் கலக்கக் காரணம் விமானக்குண்டு வீச்சுகளே- பொ.ஐங்கரநேசன்

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை

வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு
10.02.2015

வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப்பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடவே, எண்ணெய் மாசு வடமாகாண சபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் விடயமாகவும் ஆகியிருக்கிறது. அந்தவகையில் கௌரவம் மிக்க இந்தச் சபையில் இதுபற்றிச் சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

சுன்னாகம் அனல் மின்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணறுகளில், இலங்கை தரநிர்ணய நிறுவகத்தால் (Srilanka Standard Institute) குடிநீரில் இருக்கலாம் என அனுமதிக்கப்பட்ட எண்ணெய் மாசின் அளவைவிட (1மில்லிகிராம்/ இலீற்றர்) அதிக அளவில் எண்ணெய் மாசாக உள்ளது என 2012 ஆம் ஆண்டே தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையின் நீர்ப்பகுப்பு ஆய்வுகளில் இருந்து அறிய முடிகிறது. இதே கிணறுகளில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை மேற்கொண்ட ஆய்வுகளிலும் எண்ணெய் மாசு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாசுக்கான காரணம்

நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்திருப்பதற்கு சுன்னாகத்தில் உள்ள அனல் மின்நிலையமே காரணமாகக் கருதப்படுகிறது 1958ஆம் ஆண்டுமுதல் சுன்னாகத்தில் அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது.

ஆரம்பத்தில் இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமான டீசல் அனல் மின்பிறப்பாக்கியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. யுத்தகாலத்தில் விமானக்குண்டு வீச்சால் சேதமடைந்த எரிபொருள் தாங்கியில் இருந்து 1500 கன மீற்றருக்கும் அதிகமான டீசல் வெளியேறியுள்ளது. ஒருபகுதி டீசல் எரிந்துபோக, பெரும்பகுதி அருகாமையில் உள்ள தாழ்வான குளத்தை நோக்கி வடிந்தோடியுள்ளது. இது ஊர்மக்களால் எண்ணெய்க் குளம் எனஅழைக்கப்பட்டுள்ளது.அக்றிக்கோநிறுவனத்தின் பின்னர் நொதேண்பவர் (Northern Power)என்ற நிறுவனம் நீதிமன்றால் அண்மையில் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை டீசல் மின்பிறப்பாக்கிகளின் மூலம் மின் பிறப்பித்து வந்துள்ளது. 2013ஆம் ஆண்டே இந்நிறுவனத்துக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதி (Environmental Protection License) இலங்கை முதலீட்டுச் சபையால் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டுள்ளது. அதுவரையில் இந்நிறுவனமும் சுற்றாடல் தொடர்பான அக்கறையின்றியே இயங்கியிருக்கின்றது. அக்றிக்கோ நிறுவனம் எண்ணெய்க் கழிவுகளை வெளியேற்றிய இடத்திலேயே இந்நிறுவனமும் தொடர்ந்து வெளியேற்றிவந்திருக்கிறது. அத்தோடு இந்நிறுவனத்தின் மின்பிறப்பாக்கி, புதியது அல்ல. வெளிநாட்டில் இருந்து பாவித்தநிலையிலேயே தருவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு என்பது வடக்குக்கு மாத்திரம் அல்ல, இலங்கைக்கே இதுவரையில் முன்னுதாரணம் அற்ற ஒரு அனர்த்தம் என்பதால் இதனை எதிர் கொள்வதில்; சில தடங்கல்களும் தயக்கங்களும் நிலவுகின்றன. எல்லாத் தடங்கல்களையும் தாண்டி இக்குடிநீர்ப்பிரச்சினைக்குநிரந்தரத் தீர்வு விரைவில் எட்டப்படும் என்று உறுதிகூறி அமர்கின்றேன்.

Leave a Response