ஐ.நா அவைக்கும், சிங்கள அரசுக்கும் நெருக்கடி- தமிழ் அரசியல்தலைவர்கள் செய்த உருப்படியான செயல்

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம், வடக்கு மாகாணசபையில் பிப்ரவரி 10 ஆம் நாளன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்தத் தீர்மானம், நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்றைய அமர்வில் நிறைவேற்றப்பட்டது.

இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றது இனப்படுகொலையே என்றும், இதுகுறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் சிவாஜிலிங்கத்தின் தீர்மானத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்து உரையாற்றினார்.

சட்டநடைமுறைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தத் தீர்மானம் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கள, தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் தமிழ், சிங்கள மொழிகளில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க – தமிழ் மக்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கான – அனைத்துலக அரசியல் முன்னெடுப்புக்கான முக்கிய தீர்மானமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரேரணையில் ”ஈ.பி.டி.பி.” என்ற கட்சிப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட எதிரணி உறுப்பினர் தவநாதன், வரலாற்று முக்கியத்துவம்மிக்க இந்த தீர்மானத்தில் அந்த சொற்பதம் நீக்கப்பட வேண்டும் என்று கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அந்த சொற்பதத்தை மட்டும் நீக்க உடன்பட்டார்.

இந்தப் பிரேரணையை முதலமைச்சர் சமர்ப்பித்து, உரையாற்றி முடித்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 30 உறுப்பினர்களும் எழுந்து நின்று அதனை வழிமொழிந்தனர்.

இதனையடுத்து மாகாணசபையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் பிற்போடப்படுவது குறித்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழ்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் இந்த நடவடிக்கை இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கவல்லது என்று அரசியல்வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

Leave a Response