மராட்டிய அரசைப் போல தமிழக அரசும் செய்யவேண்டும் – ஏர்முனை கோரிக்கை

மகாராஷ்டிரா மாநில அரசைப்போலவே தமிழக அரசும் அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஏர்முனை இளைஞர் அணி செயல்தலைவர் வெற்றி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும், வேளாண் விளைபொருட்களுக்கு ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்,மின்கட்டணத்தில் சலுகை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகராஷ்டிர மாநில விவசாயிகள் 11 நாட்களாக கடுமையாக போராடிவந்தார்கள்.

அந்தப் போராட்டத்தின் தாக்கம் மத்தியப்பிரதேசத்திலும் ஏற்பட்டதால் அங்கும் விவசாயிகளின் போராட்டம் பெரிதாக வெடித்தது. அதில் ஆறு விவசாயிகள் அநியாயமாக போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

விவசாயிகளின் கிளர்ச்சி தீவிரமடைந்து மும்பை, நாசிக் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய நகரங்களின் காய்கறி சந்தைகள் வெறிச்சோடின.அது மேலும் தீவிரமாதை கண்டு அச்சமடைந்த *மகாராஷ்டிரா மாநில அரசு விவசாய சங்க பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதோடு சிறு,குறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய முன்வந்திருக்கிறது.

அதன் வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்கு குழு ஒன்றை அமைத்து அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது வரவேற்கத்தக்கது,

2014ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழகத்தில் விவசாயிகள் 895 பேர் தற்கொலை செய்துகொண்டனர். 2015இல் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 606ஆக இருந்தது என அரசுத் தரப்பில் கூறப்பட்ட நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மழை பொய்த்துப்போய் வறட்சியாலும் கடன்தொல்லையாலும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதன் முழுமையான விவரங்களை இன்னும் அரசு வெளியிடவில்லை.

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசே கூறிவரும் நிலையில் தமிழகத்திலும் விவசாயக் கடன்களை முற்றாக தள்ளுபடி செய்யவேண்டுமென தமிழ்நாடு விவசாயிகளும் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறோம். இப்போது மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் போராட்டத்தின் நியாயத்தை அம்மாநில அரசு ஏற்றுக்கொண்டதால் போராட்டம் வெற்றி கண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு இன்னும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் புறக்கணித்து வருகிறது. இனிமேலும் காலம் கடத்தாமல் மகாராஷ்டிரா மாநில அரசைப்போலவே தமிழக அரசும் அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக கேட்டுகொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response