தம்பிராமையா மகன் பட வெற்றிக்கு பொறுப்பேற்ற பிரபுசாலமன்..!


ஒரு இயக்குனராக திரையுலகில் சாதிக்கவேண்டும் என நுழைந்த தம்பிராமையா அதில் எதிர்பார்த்த பலனை அடையாமல் தளர்ந்திருந்த நேரத்தில் அவருக்கு ஆபத்பாந்தவனாக வந்தவர் தான் இயக்குனர் பிரபுசாலமன்.. மைனா படம் மூலம் விதார்த், அமலாபாலை மட்டுமல்ல, தம்பிராமையாவையும் ரொம்பவே பிசியான நடிகராக மாற்றிவிட்டார். அதுமட்டுமல்ல தனது படங்களிலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தும் வருகிறார்..

அப்படிப்பட்ட பிரபுசாலமன் தம்பிராமையாவுக்கு காட்பிரதர் மாதிரி.. அவரது மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் வாய்ப்பு பாடலாசிரியர் யுகபாரதி மூலமாக தேடிவந்தது. உடனே இந்தப்படத்தின் கதையை இயக்குனர் பிரபு சாலமனிடம் சொல்லி, வரும் சில திருத்தங்கள் சொல்லி ஒகே சொன்னபின் தான் தன் மகனை படத்தில் நடிக்கவே சம்மதித்துள்ளார் தம்பிராமையா.

ஆக இந்தப்படத்தின் வெற்றியை பிரபுசாலமன் உறுதி செய்த பிறகே தம்பிராமையா மகன் இதில் நடிக்க ஆரம்பித்தார் என்றே சொல்லவேண்டும். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கிவந்த இன்பாசேகரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரும் பத்திரிக்கை மக்கள் தொடர்பாளருமான பி.டி.செல்வகுமார் வெளியிடுகிறார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.. தம்பிராமையாவின் மகன் என்பதால் வாழ்த்துவதற்காக பிரபலங்கள் குவிந்துவிட்டனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, கே.எஸ்.ரவிக்குமார், பிரபு சாலமன், எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், சுராஜ், பேரரசு, ‘ஈரம்’ அறிவழகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்..

Leave a Response