தமிழக அரசுக்கு மானம் ரோசம் இருக்கிறதா? -பாரதிராஜா ஆவேசம்


மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், நான்கு பேர்மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இன்று சேப்பாக்கத்திலிருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, ‘திருமுருகன் என்ன கொலையாளியா, எதற்காக அவர்மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது, யாரும் மத்திய அரசை விமர்சிக்கவே கூடாதா, அப்படி விமர்சித்தால் என்ன தவறு இருக்கிறது. அதற்காக அவர்மீது குண்டர் சட்டத்தைப் போடுவதா. நானும்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவேந்தலுக்குப் போயிருக்கிறேன். நான் பிரபாகரனையே நேரில் சந்தித்திருக்கிறேன். அதைப்பற்றி பொதுத்தளத்திலும் பேசியிருக்கிறேன். அதற்காக என்மீதும் குண்டர் சட்டத்தைப் பதிவு செய்யுங்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்தான் தலைவனாக வேண்டும். இந்த மண்ணை ஆள்வதற்கு அயலானுக்கு உரிமையில்லை. வேறு எந்த இடத்திலாவது போய் தமிழன் தலைவனாக முடியுமா, அரசியல் செய்ய முடியுமா, ஆட்சியில் உட்கார முடியுமா. மற்ற மாநிலத்தவர்களை அரவணைப்போம். அதற்காக சமபங்கு கொடுக்கமுடியாது. இனம் மற்றும் மொழி விஷயத்தில் தமிழர்களுக்குத் துருப்பிடித்துவிட்டது.

தமிழர்களுக்கே ஈழத்தைப் பற்றியும் அங்கு நடந்த இனப்படுகொலை பற்றியும் தெரியாத நிலையுள்ளது. அதைப்பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே, மெரினா கடற்கரையில் ஒவ்வோர் ஆண்டும் நினைவேந்தல் நடத்தப்படுகிறது. மடியில் கனம் இருப்பதால் மத்திய அரசுக்குப் பயந்து இந்தக் கைது நடவடிக்கையைச் செய்துள்ளது தமிழக அரசு. ரோஷம், மானம் இருந்தால் தமிழக அரசு நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்று காட்டமாகக் கூறினார்.

Leave a Response