ஜெ அனுமதித்த நிகழ்வுக்கு எடப்பாடி தடை விதிப்பது ஏன்?

சென்னை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது இந்நகழ்ச்சிக்குத் தடை சொல்லவில்லை. அவர் வழி நடப்பதாகச் சொல்லும் எடப்பாடி தடை விதிக்கிறார். தடை அறிவிப்புக்குப் பின் மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …..

திட்டமிட்டபடி 8ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெறும்.

நினைவேந்தல் நிகழ்வு என்பது பண்பாட்டு நிகழ்வு. அது தமிழர்களின் அடிப்படை உரிமை. உலகின் அனைத்து இனக்குழுக்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகவே இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு உலகமெங்கும் நடக்கிறது. பிறப்பு, இறப்பு ஆகிய நிகழ்வுகளுக்கான மரியாதை செலுத்தும் மரபுகள் நீண்ட நெடுங்காலமாக பண்பாட்டியல் மரபாக கடைப்பிடித்து வருவதை உலகின் அரசியல் சாசனங்கள் உறுதி செய்கின்றன. இந்த உரிமையை பாதுகாக்க வேண்டுமென்பது உலக நீதியாக மற்றும் இயற்கை நீதியாக ஐ.நாவும் வரையறை செய்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மெரினா எனும் தமிழர் கடற்கரையில் நிகழ்கிறது. இது கடந்த 7 வருடமாக நிகழ்ந்து வரும் ஒரு பண்பாட்டு நிகழ்வு.

இந்நிகழ்வு தமிழீழ மக்களுக்கான மரியாதை செலுத்தும் நிகழ்வாகவே இருக்கிறது. நீர்நிலை அருகில் இறந்தவர்களுக்கு நினைவேந்துவது மரபாக இருந்து வருகிறது. ஆதிச்ச நல்லூர் எனும் 6000 வருடத்திற்கு முன்பான தமிழர்களின் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடம், தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் இறந்தவர் புதைக்கும் இடமாகவே அகழ்வாய்வில் கண்டறியபப்ட்டது. இந்த மரபின் உரிமையை பாதுகாக்கவேண்டிய கடமை தமிழக காவல்துறைக்கு இருக்கிறது. ஏனெனில் இது அடிப்படை மனித உரிமையாக ஐ,நாவினாலும், இந்திய அரசியல் சாசனத்தினாலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த உரிமையை எந்த சட்டத்தினாலும் தடுத்து/ மறுத்து விட முடியாது. அதுவும் இந்நிகழ்விற்கு ஒன்றுகூட தடை என்று அரசினால் காட்டபப்டும் ‘சென்னை மாநகர சட்டம்41 ( section 41 madras city police act) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட ஒன்றுகூடலை தடுக்கும் சட்டம். இந்த அடிமை காலனிய கால சட்டத்தை வைத்து தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மறுக்க முயலுகிறது அரசு.

இதே மெரினா கடற்கரையில் இறந்த சொந்தங்களுக்காக தமிழர்கள் மரியாதை செலுத்துவதும் நடக்கிறது. அதே போலவே அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோருக்குமான மரியாதையையும் இதே கடற்கரையில் மக்கள் செலுத்துகிறார்கள். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் அனுமதி பெற்று நடத்தவேண்டுமென்று எந்த சட்டமும் சொல்லவில்லை. அந்த உரிமையின் அடிப்படையிலேயே நினைவேந்தல் நிகழ்வை மே17 இயக்கமும் ஒருங்கிணைக்கிறது.

தமிழகத்தின் கட்சிகள் ஒன்று கூடி சட்டசபையில் ‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானத்தின் அடிப்படையில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான நினைவேந்தலை அரசே முன்வந்து நிகழ்த்தி இருக்க வேண்டும், இந்த தீர்மானத்தை கொண்டுவந்து ஆதரித்த கட்சிகளும் முன்னெடுத்திருக்க வேண்டிய பொறுப்பினை எளிய மக்கள் முன்வந்து நிகழ்த்தும் பொழுது அதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. ஆனால் தமிழகத்தில் 7 ஆண்டுகளாக நடந்து வந்த நினைவேந்தலை மத்திய பாஜக அரசினால் முடக்கப்படுவதற்கான முயற்சிகள் நடப்பதை காண்கிறோம். பலவீனமான தமிழக அரசும் இந்த அழுத்தத்திற்கு அடிபணிந்து நிற்கிறது. தமிழீழ மக்களுக்கு எதிரான கொள்கை கொண்ட பாஜக-ஆர்.எஸ்.எஸ் தமிழர்களின் அடிப்படை பண்பாட்டு உரிமையான ‘இறந்தவர்களுக்கு மரியாதை’ செலுத்தும் உரிமையை தடுக்க நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழர்களின் பண்பாட்டு உரிமை, இனப்படுகொலைக்கான நினைவேந்தல் ஆகியவற்றை முடக்க நினைக்கும் பாஜக – பலவீனமான தமிழக அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மீறி 21 மே 2017இல் நினைவேந்தல் சென்னை மெரினா, கண்ணகி சிலையருகே மாலை 5 மணிக்கு நடைபெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசின் இந்த பாசிச அடக்குமுறையை அனைத்து ஜனநாயக ஆற்றல்களும் ஒரே குரலில் கண்டிக்க முன்வரவேண்டும்.

மே பதினேழு இயக்கம்
20- 05 -2017

Leave a Response