மாதொருபாகன் என்ற பெயர் பெருமாள்முருகனுக்கு மட்டுமே உரித்தானல்ல. அவர் கண்டுபிடித்ததுமல்ல.

 

மாதொருபாகன் என்கிற பெயரில் திரைப்படம் எடுக்கப்போவதாக விளம்பரங்கள் வந்தன. அதைத் தொடர்ந்து அந்தப்பெயரில் படமெடுக்க யாருக்கும் உரிமையில்லை என்று பெருமாள்முருகன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைக் கண்டிக்கும் பத்திரிகையாளர் ஏகலைவனின் பதிவு….

“இந்தப் பரபரப்பையும் சூழலையும் பலர் தங்களுக்கேற்ற விதத்தில் பயன்படுத்திக்கொள்ள முயல்வது மிகுந்த வருத்தம் தருகிறது. ‘மாதொருபாகன்’ என்னும் தலைப்பில் ஒரு திரைப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தத் தலைப்பையோ கதையையோ எவ்விதத்திலும் பயன்படுத்த யாருக்கும் எந்த உரிமையும் வழங்கவில்லை. தயவுசெய்து பெருமாள்முருகனின் விலகலும் விடுபடலுமான உணர்வுகளையும் மனநிலையையும் புரிந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். எதிலும் தொடர்புபடுத்தாமல் ‘சும்மா இருக்க’ அனுமதிக்குமாறும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”

மாதொருபாகன் நாவலின் எழுத்தாளர்
தோழர் பெருமாள் முருகனின் அறிக்கையின் ஒரு பகுதி இது.

அவருக்கு நானறிந்த சில கேள்விகள்.

மாதொருபாகன் என்ற பெயர் அவருக்கு மட்டுமே உரித்தானல்ல. அவர் கண்டுபிடித்ததுமல்ல. அது சிவனின் அர்த்தநாரீஸ்வர அவதாரமாக நிற்கும் பெயர்.

அடுத்து ‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சைக்குள்ளானது 2014 இறுதியில். கடந்த இரண்டு மாதங்களுக் குள்ளாகதான். அதுவும் ஜனவரியில் நடந்த புத்தக கண்காட்சியை ஒட்டி ஓட்டப்பட்டது. எதிர் பாராவிதமாக அது தோழர் பெருமாள் முருகனை வெகுவாக தாக்கிவிட்டது வேறு செய்தி.

ஆனால் நவீன கூத்துப் பட்டரை தாயாரிப்பில் தோழர் ஆதிரா எழுதி இயக்குவதாக விளம்பரம் வந்த திரைப்படத்தின் பெயர் பதிவு கடந்த 2014 ஜுலை மாதமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களின் நாவல் சர்ச்சையாவதற்கு முன்பாகவே.

மேலும் ஆதிரா எழுதி இயக்கும் கதையும் களமும் வேறு. உங்களின் நாவலில் இருக்கும் கதை வேறு. இரண்டிற்கும் தொடர்பில்லை.

எனில் “இந்தப் பரபரப்பையும் சூழலையும் பலர் தங்களுக்கேற்ற விதத்தில் பயன்படுத்திக்கொள்ள முயல்வது மிகுந்த வருத்தம் தருகிறது” என்ற பதத்தை பயன்படுத்தியிருப்பது எந்த விதத்திலும் பொருந்தாத ஒன்றாகவே படுகிறது. அதாவது நீங்கள் சொன்ன பரபரப்பு சூழுலுக்கு முன்பாகவே நவீன கூத்துப்பட்டரை ‘மாதொருபாகன்’ பெயரை பதிவு செய்துவிட்டது.

குறைந்தபட்சம் அறிக்கை விடுவதற்கு முன்பாக நவீன கூத்துப்பட்டரை ஆதிராவிடம் பேசி தெரிந்துகொண்டு தோழர் பெருமாள் முருகன் அறிக்கை விட்டிருக்கலாம் என்பதே என் கருத்து. உங்களின் அறிக்கையோ அல்லது புகாரோ நவீன கூத்துப்பட்டரையை கட்டுப்படுத்தாது. இந்த ஒரு விஷயத்தை பொறுத்த மட்டில் தோழர் சும்மா இருப்பதே நல்லதெனப் படுகிறது.

Leave a Response