
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழ்நாட்டில் சமூகவிரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி,பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமையாகும்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்குநாள் படிப்படியாகச் சீர்குலைந்து வருகிறது.
திண்டிவனம் அருகே சலூன்கடை உரிமையாளர் ஐந்துபேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். திருச்சியில் ரவுடி பாதுஷா ஓடஓட விரட்டி விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டத்தில்,
மதுக்குடிப்பகத்தில் பொன்னாம்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நவீன்குமார் மது அருந்திக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.இக்கும்பலைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கை,கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 12 வயது, 15 வயது சிறார்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை,பெரம்பூரில் தன் கணவனை மனைவியே ஆண்நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம்,சீதபற்பநல்லூர் அருகே பொதுஇடத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 7 பேரை அரிவாளால் வெட்டியதாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.திருச்சி,ஸ்ரீரங்கம் நகர காங்கிரசு கமிட்டி அலுவலகத்தில் போதைப் பொருட்களை பதுக்கிவைத்திருந்ததாக காங்கிரசு நிர்வாகி நடராசன் என்பவரைக் கைது செய்து,அவர் பதுக்கிவைத்திருந்த 2 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது,புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள பாலக்கரையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக்க 7 சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தடை செய்யப்பட்ட 227 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்திய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தகரை அருகே 85 வயது மூதாட்டிக்குப் பாலியல் வன்க்கொடுமை செய்துவிட்டு தப்பிய நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதால்,மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் குற்றச்செயல்களின் தொடர்ச்சியாகும்.கடந்த சிலமாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.பொதுமக்கள் தங்கள் உயிருக்கு அச்சம் கொண்டு வாழும் நிலை உருவாகியுள்ளது.
இந்தக் கொலைகள் சாதாரண தனிநபர் தகராறுகள் மட்டுமல்ல;குற்றவாளிகள் தைரியமாக பகலில்,பொதுஇடங்களில் கொலைகள் செய்து தப்பிச்செல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு நாளுக்குநாள் சீர்குலைந்து வருகிறது என்பது இதன்மூலமே தெளிவாகிறது.
ஆளும் அரசு தொடர்ந்து மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது.காவல்துறை முழுமையாக அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால்,குற்றவாளிகளுக்கு தைரியம் அதிகரித்துள்ளது.குற்றங்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல்,வெற்று அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இதனால் ஏழை,நடுத்தரமக்களும்,பெண்களும்,வியாபாரிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இக்கொலை வழக்குகளில் உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும்.தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தீவிரமாகக் கையாள முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும்.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.காவல்நிலையங்களில் புகார் கொடுப்பதற்கு மக்கள் அச்சப்படாத வகையில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யவேண்டும்.கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை வழங்கும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவேண்டும்.
தமிழகத்தில் மக்கள் அமைதியாக வாழவேண்டுமென்றால்,உடனடியாக சீர்குலைந்துவரும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும்.இல்லையென்றால் டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் போராட்டம்போல சட்டம் ஒழுங்குக்கும் மக்கள் போராடும் நிலை உருவாகும்.
எனவே சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமையாகும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


