
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தாந்தோணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் செல்லாண்டிப்பட்டி தனியார் அரங்கில் அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ம.சின்னசாமி, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது…
கரூரில் அதிமுக மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்குக் கூட அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று அக்டோபர் 28 இல் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. அதிமுகவினரை மிரட்டி திமுகவில் சேர்த்து வருகின்றனர். கட்சியினரை ஜாமீனில் வெளியே எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தாந்தோணி ஒன்றியத்தில் 16,800 உறுப்பினர் படிவங்கள் உள்ளன. தாந்தோணி ஒன்றியத்தில் 12 ஆண்டுகள் செயலாளராக இருந்துள்ளேன். 303 கிளைகள் இருந்தன. தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டோம் என்பது உறுப்பினர் அட்டைகள் வழங்குவதிலே தொடங்கிவிட்டது.
கூட்டணி சரியில்லை. தலைவர்கள் விரைவில் நல்ல கூட்டணியை அமைப்பார்கள். திமுக கூட்டணி விரைவில் உடையும். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும் என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை வழங்கி பேசியபோது….
கிருஷ்ணராயபுரம் தொகுதி 1989 ஆம் ஆண்டு சேவல் சின்னம் வென்ற 27 தொகுதிகளில் ஒன்றாகும். கேட்காமலே கொடுத்த தலைவர் எம்ஜிஆர். சத்துணவு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.
எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா பல்வேறு மாற்றங்களை தமிழகத்தில் உருவாக்கினார். 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை போட்டியிட வைத்தார். 1989, 91 ஆம் ஆண்டுகளில் அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 1991 ஆம் ஆண்டு திமுக இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மாற்றங்கள் உருவாகும்.
நாம் அதற்கான பணிகளை சிறந்த முறையில் அமைத்திட வேண்டும்.2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம். எத்தனையோ திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
விரைவில் அதிமுக ஆட்சி மலரும். அதற்கான காலமாற்றம் உருவாகிறது.அதிமுக ஆட்சி மலரவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


