மக்கள் தொகை அதிகம் அதனால் பெட்ரோல் விலை உயருகிறது – மத்திய அமைச்சர் விளக்கம்

சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து ரூ.89.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.82.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90-ஐ தாண்டி உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.90.18 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.83.18 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது.

சமீப காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளைக் கவலையடையச் செய்துள்ளது. விரைவில் விலை குறைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் சமாஜ்வாதி எம்.பி. விஷாம்பர் பிரசாத் நிஷாத், “பெட்ரோல் விலை அன்னை சீதாதேவியின் நேபாளத்தில் குறைவாக இருக்கிறது, இராவண இலங்கையில் குறைவாக இருக்கிறது. இராமர் இந்தியாவில் எப்போது பெட்ரோல் விலை குறையும்?” என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக எதற்கெடுத்தாலும் இராமாயணத்தை மேற்கோள் காட்டிப் பேசுவதையும் சுட்டிக்காட்டும் விதமாக அவர் எழுப்பிய கேள்வி அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதில் அளிக்கும் போது, இவ்வாறு அண்டை நாடுகளுடன் பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிடுவது சரியாகாது, அந்நாட்டு மக்கள் தொகை குறைவு, நுகர்வும் குறைவு. நாம் நம்மை பெரிய பொருளாதாரத்துடன் ஒப்பிடுவதா அல்லது சிறிய பொருளாதாரங்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதா? பெரிய அளவில் நுகரப்படும் பொருட்களின் விலை இந்த நாடுகளில் அதிகம்.இந்த நாடுகளில் மண்ணெண்ணெய் விலையும் நம் நாட்டு மண்ணெண்ணெய் விலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் தெரியும். பங்களாதேஷ், நேபாளில் கெரசின் விலை ரூ.57 முதல் 59 வரை உள்ளது. இந்தியாவில் ரூ.32 ஆக இருக்கிறது.

கடந்த 300 நாட்களில் 60 நாட்கள் விலை ஏற்றப்பட்டுள்ளது. 7 நாட்கள் பெட்ரோல் விலை, 21 நாட்கள் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 250 நாட்களுக்கு விலைகளில் மாற்றமில்லாமல் இருந்துள்ளது. எனவே அனைத்துகால அதிக விலை என்று பிரச்சாரிப்பது தவறு, என்று விளக்கம் அளித்தார்.

Leave a Response